×

வில்லுக்குறி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தம்: பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

திங்கள்சந்தை, ஜன.10:  தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ₹1000 மற்றும் கரும்பு, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி பருப்பு, பச்சை அரிசி ஆகியவை வழங்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. மாடத்தட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் வில்லுக்குறி 1, வில்லுக்குறி 2, மணக்கரை, குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை ஆகிய 5 நியாயவிலைக் கடைகளிலுள்ள சுமார் 5 ஆயிரத்து 709 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை வங்கித் தலைவர் அகஸ்டின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று(புதன்) காலை முதல் வழக்கம் போல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மதியம் வில்லுக்குறி மெயின் ரோட்டிலுள்ள ரேஷன் கடை ஊழியர் திடீரென்று கடையை பூட்டிவிட்டு பொங்கல் பரிசு வழங்க முடியாது. கோர்ட் உத்தரவு என்றார்.
இதனால் கடை முன்பு கூடியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட் உத்தரவு நகலை காட்டுங்கள் என்று பொதுமக்கள் ரேஷன்கடை ஊழியரிடம் கேட்க, அவர் சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி சந்திப்பு ரேஷன்கடை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கூட்டுறவு வங்கி நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறியதை ஏற்று போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

Tags : Vilakku Ration Store ,
× RELATED நிதி நிறுவனங்களில் போலி நகை அடகு வைத்து மோசடி மேலும் இருவர் ைகது